Tuesday, July 29, 2014

சைவம் என் பார்வையில்

சைவம்-இந்நேரம் நிறைய பேர் பார்த்து ரசிச்சிருப்பீங்க.நமது ரசனையை நம்பி எடுக்கப்படுகிற இந்தமாதிரி படங்கள் ஓடினால் நாம் ரசிக்க இன்னமும் நல்ல படங்கள் வரிசைக்கட்டி நிற்கும்.

கதை பெரிசா ஒண்ணுமில்லை. ஒரு கிராமம் அதுல ஒரு குடும்பம்.குடும்ப தலைவர் நாசர்.கோவில் திருவிழாவிற்கு அவரது மகன்கள், மகள், பேரப்பிள்ளைகள் வருகின்றனர். அப்போ நடக்கிற சில கெட்ட நிகழ்வுகளால பூசாரி ஏதாவது வேண்டுதல் நிறைவேற்றாம விட்ருப்பீங்கனு ஞாபகப்படுத்தறாரு.அந்த வீட்டு செல்லப்பேத்தி ஆசையா வளக்கிற சேவல் (பாப்பா) 3 வருஷத்துக்கு முன்னாடி சாமிக்கு நேந்துவிட்டது எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருது.
நாசர் அத பலி கொடுக்கலாம்னு முடிவு பண்றப்போ சேவல் காணும்.
அந்த சேவல குடும்பமே தேடுது. யார் ஏன் ஒளிச்சு வைச்சாங்க, சேவல கண்டுப்பிடிச்சாங்களா, அந்த சேவலோட நிலை என்னங்கறது மீதி கதை.

திரைக்கதை நன்று. எல்லா கதாபாத்திரங்களும் அளவோட நடிச்சு அவங்கவங்க பாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்காங்க.
சாரா அழகுப்பதுமை.நாம செய்ற தப்புக்கு யார பலிக்கடா ஆக்கலாம்னு யோசிக்கிற இந்த காலத்துல யாரோ செய்ற தப்புக்கெல்லாம் சாராவே முன்வந்து தோப்புக்கரணம் போடும் பண்பு வியக்கத்தக்கது.

சரவணன் என்கிற ஷ்ரவன் கதாபாத்திரம் அருமை.பட்டணத்தில் வளர்ந்த சிறுவனின் மனநிலை நன்றாக பிரதிபலிக்கிறது.கண்மாய்ல துணி துவைக்கிறதையும் எருமை குளிப்பாட்டுறதையும் பார்த்து இதுதான் உங்க ஊரு beachஆனு கேட்டு கடுப்பாகும்போதும் சரி, பாண்டி விளையாடத்தெரியாமல் கீழே விழும்போதும் சரி, எல்லோருக்கும் சாரா சேவலை மறைக்கும் விஷயம் தெரியும் எனத்தெரியாமல் அனைவரிடமும் அடி வாங்கும்போதும் சரி,  கிளைமாக்சில் சாராவிடம் மன்னிப்பு கேட்கும்போதும் சரி அவனது நடிப்பு அட்டகாசம்.

நாசர் தேர்ந்த நடிகர்.அவரது பங்கை சரிவர செய்திருக்கிறார்.சேவலை தேட நடக்கும் கலாட்டாக்கள் அனைத்தும் ரகளை. அதிலும் உரித்த கோழியை காண்பித்து இதுதான் உன் கோழி என திருடன் சொல்வதும் எப்படி நம்புவது என்றதும் 'உங்க கோழிக்கு மச்சமில்லையா?' எனக்கேட்பது கலகலப்பின் உச்சம்.

அந்த வெற்றிலை ஜோசிய சீனும் கலகலப்பின் உச்சம். வெற்றிலையில் மைபோட்டுப்பார்த்து 'வீடு தெரியுது முற்றம் தெரியுது அதுக்குமேல இருட்டா தெரியுதே' என்றதும் அந்த வீட்டில் வேலைபார்க்கும் பெண் 'மைப்போட்டா இருட்டாதான் தெரியும் இந்தாங்க சுண்ணாம்பு போட்டு பாருங்க' என்று மை வைத்த வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது ரகளை.

அந்த வேலைக்காரர் மற்றும் அவரது மனைவி கதாப்பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கது.

கிராமத்து கதை எனில் உறவுகளின் உன்னதம், ஊர் பகை, விவசாயத்தின் பெருமை எனப்பார்த்து பழகிய நமக்கு ஐந்தறிவு ஜீவன்களிடம் காட்டும் பரிவு எந்தளவு அவசியம் என்பதை எடுத்துரைக்கிறது.

இப்படி நிறைகள் இருந்தாலும் சில இடங்களில் படத்தில் சிறு தொய்வை உணரமுடிகிறது. சேவல் தேடும் சீன் மிகவும் நீளமென்றே தோன்றுகிறது.பல காட்சிகளில் 'வருஷம் 16' திரைப்படத்தின் சாயலை உணரமுடிகிறது.

எனினும் ஒரு புதிய களத்தை எடுத்துக்கொண்டு அதை ரசிக்கும்படி கொடுத்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள்!ஒருமுறை பார்க்கலாம்.



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails