Friday, August 15, 2014

விந்தை


வெள்ளையனை
வெளியேற்றிய திருநாளுக்கு வாழ்த்து கூற
நாம் உபயோகிப்பது
ஆங்கில மொழி
'Happy independence day'!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!



Wednesday, July 30, 2014

ரசிகனின் பார்வையில்

விஜய் டீ.வி யின் 'ஆபீஸ்' தொடரின் கணக்கற்ற ரசிகர்களில் நானும் ஒரு அங்கம். இன்றைய எபிசோட் என்னை மிகவும் பாதித்தது.

'விஷ்ணு' கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டெனில் அது அவரது வெகுளித்தனத்திற்காக மட்டுமே.அந்த projector திருட்டில் விஷ்ணுவை திருடனாய் காட்டியிருப்பது வருந்தத்தக்கது. நண்பனுக்கு அத்தனை அவமானம் நேரும்போதும் மௌனம் சாதிப்பதாய் காண்பித்திருப்பது சுயநலத்தின் உச்சம்.

தனக்கென்ன துன்பம் வரினும் நண்பனின் மானம் காப்பவனே சிறந்த தோழன் ஆவான்.நட்பின் கௌரவத்தையே குடை சாய்ப்பதாய் இருந்தது அந்த சம்பவம்.அதை(projector) எடுக்க என்ன நியாயம் கூறினாலும் நட்புக்கு செய்யும் துரோகம் என்பதை மறுக்கமுடியாது. கத்தியால் குத்துப்பட்டாலும் வலி காயம் குணமாகும்வரை மட்டுமே. ஆனால் நம்பிக்கை துரோகம் வாழ்நாள் முழுதும் காயப்படுத்தும்.

இத்தனையும் நடந்தும் ஏதுமறியாதவன்போல சாதாரணமாய் வலம் வரும் விஷ்ணு கதாப்பாத்திரம் வில்லனை விட ஒரு படி கீழிறங்கியது.

கார்த்திக் மன்னித்தாலும் இச்செயலை என்போன்ற ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது.



Tuesday, July 29, 2014

சைவம் என் பார்வையில்

சைவம்-இந்நேரம் நிறைய பேர் பார்த்து ரசிச்சிருப்பீங்க.நமது ரசனையை நம்பி எடுக்கப்படுகிற இந்தமாதிரி படங்கள் ஓடினால் நாம் ரசிக்க இன்னமும் நல்ல படங்கள் வரிசைக்கட்டி நிற்கும்.

கதை பெரிசா ஒண்ணுமில்லை. ஒரு கிராமம் அதுல ஒரு குடும்பம்.குடும்ப தலைவர் நாசர்.கோவில் திருவிழாவிற்கு அவரது மகன்கள், மகள், பேரப்பிள்ளைகள் வருகின்றனர். அப்போ நடக்கிற சில கெட்ட நிகழ்வுகளால பூசாரி ஏதாவது வேண்டுதல் நிறைவேற்றாம விட்ருப்பீங்கனு ஞாபகப்படுத்தறாரு.அந்த வீட்டு செல்லப்பேத்தி ஆசையா வளக்கிற சேவல் (பாப்பா) 3 வருஷத்துக்கு முன்னாடி சாமிக்கு நேந்துவிட்டது எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருது.
நாசர் அத பலி கொடுக்கலாம்னு முடிவு பண்றப்போ சேவல் காணும்.
அந்த சேவல குடும்பமே தேடுது. யார் ஏன் ஒளிச்சு வைச்சாங்க, சேவல கண்டுப்பிடிச்சாங்களா, அந்த சேவலோட நிலை என்னங்கறது மீதி கதை.

திரைக்கதை நன்று. எல்லா கதாபாத்திரங்களும் அளவோட நடிச்சு அவங்கவங்க பாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்காங்க.
சாரா அழகுப்பதுமை.நாம செய்ற தப்புக்கு யார பலிக்கடா ஆக்கலாம்னு யோசிக்கிற இந்த காலத்துல யாரோ செய்ற தப்புக்கெல்லாம் சாராவே முன்வந்து தோப்புக்கரணம் போடும் பண்பு வியக்கத்தக்கது.

சரவணன் என்கிற ஷ்ரவன் கதாபாத்திரம் அருமை.பட்டணத்தில் வளர்ந்த சிறுவனின் மனநிலை நன்றாக பிரதிபலிக்கிறது.கண்மாய்ல துணி துவைக்கிறதையும் எருமை குளிப்பாட்டுறதையும் பார்த்து இதுதான் உங்க ஊரு beachஆனு கேட்டு கடுப்பாகும்போதும் சரி, பாண்டி விளையாடத்தெரியாமல் கீழே விழும்போதும் சரி, எல்லோருக்கும் சாரா சேவலை மறைக்கும் விஷயம் தெரியும் எனத்தெரியாமல் அனைவரிடமும் அடி வாங்கும்போதும் சரி,  கிளைமாக்சில் சாராவிடம் மன்னிப்பு கேட்கும்போதும் சரி அவனது நடிப்பு அட்டகாசம்.

நாசர் தேர்ந்த நடிகர்.அவரது பங்கை சரிவர செய்திருக்கிறார்.சேவலை தேட நடக்கும் கலாட்டாக்கள் அனைத்தும் ரகளை. அதிலும் உரித்த கோழியை காண்பித்து இதுதான் உன் கோழி என திருடன் சொல்வதும் எப்படி நம்புவது என்றதும் 'உங்க கோழிக்கு மச்சமில்லையா?' எனக்கேட்பது கலகலப்பின் உச்சம்.

அந்த வெற்றிலை ஜோசிய சீனும் கலகலப்பின் உச்சம். வெற்றிலையில் மைபோட்டுப்பார்த்து 'வீடு தெரியுது முற்றம் தெரியுது அதுக்குமேல இருட்டா தெரியுதே' என்றதும் அந்த வீட்டில் வேலைபார்க்கும் பெண் 'மைப்போட்டா இருட்டாதான் தெரியும் இந்தாங்க சுண்ணாம்பு போட்டு பாருங்க' என்று மை வைத்த வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது ரகளை.

அந்த வேலைக்காரர் மற்றும் அவரது மனைவி கதாப்பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கது.

கிராமத்து கதை எனில் உறவுகளின் உன்னதம், ஊர் பகை, விவசாயத்தின் பெருமை எனப்பார்த்து பழகிய நமக்கு ஐந்தறிவு ஜீவன்களிடம் காட்டும் பரிவு எந்தளவு அவசியம் என்பதை எடுத்துரைக்கிறது.

இப்படி நிறைகள் இருந்தாலும் சில இடங்களில் படத்தில் சிறு தொய்வை உணரமுடிகிறது. சேவல் தேடும் சீன் மிகவும் நீளமென்றே தோன்றுகிறது.பல காட்சிகளில் 'வருஷம் 16' திரைப்படத்தின் சாயலை உணரமுடிகிறது.

எனினும் ஒரு புதிய களத்தை எடுத்துக்கொண்டு அதை ரசிக்கும்படி கொடுத்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள்!ஒருமுறை பார்க்கலாம்.



Saturday, July 26, 2014

வேலை இல்லாப்பட்டதாரி என் பார்வையில்

தனுஷ் 25வது படம்.பட்டய கிளப்பியிருக்கார் மனுஷன்.படம் பேருக்கேத்தமாதிரி வேலையில்லா பட்டதாரியா எல்லாரோட ஏளன பார்வையாலயும் மனசுக்குள்ள காயப்பட்டாலும் வெளியில கெத்து காமிக்கிற கதாபாத்திரம். முதல் பாதி நகைச்சுவை, இடைவேளையில  sentiment, அப்புறம் செம்ம மாஸா இருக்கு படம்.

சரண்யா பத்தி சொல்லலன்னா படத்த நான் முழுமையா விமர்சிக்கலன்னு அர்த்தம். அவங்களுக்கு இந்த கதாபாத்திரம் அல்வா மாதிரி. பின்னிட்டாங்க.ஆனா அவங்க இறந்து போற sceneல கண்கலங்க வைச்சுட்றாங்க.

சமுத்திரக்கனி ஒரு தேர்ந்த இயக்குனர் மட்டுமில்ல நல்ல நடிகர்னும் காமிச்சிருக்கார்.

நகைச்சுவை திணிக்கப்படாம படத்தோட கலந்திருப்பது ரசிக்கும்படியா இருக்கு.விவேக் welcome back.

Second halfல students கூட்டம் கூட்டமா வந்து உதவி பண்றப்போ நண்பேண்டானு சொல்லி கைத்தட்டணும்போல இருக்கு.சின்ன சின்ன வசனங்களும் ரொம்ப சிரத்தையா கையாண்ட பாங்கு நிச்சயம் பாராட்டுக்குரியது.அமுல்பேபி வில்லன கடைசியில surrender ஆகவைச்சு வில்லனையே சிரிப்பு போலீஸ் ஆக்கிட்டாங்க.

தனுஷோட வண்டி class விவேக் அதுல ஏறி எங்க சார் walking கூட்டிட்டு போறீங்கன்னு கேட்குறப்போ theatreஏ சிரிப்பலைல குலுங்குது.

அமலாபால் அழகு. சுரபி நல்ல நடிகை இவ்ளோ சின்ன கதாபாத்திரத்துக்கு தேவையில்லனு தோணிச்சு.

இசை as usual. நல்லாயிருந்தது.
மொத்தத்துல மிஸ் பண்ணாம பார்க்க கூடிய படம்!



Friday, June 6, 2014

அன்னைக்கோர் கடிதம்!

எனது லட்சியங்களின் உச்சம் உனது சந்தோஷம்
எனது வெற்றிகளின் உச்சம் உனது புன்சிரிப்பு
எனது வேட்கைகளின் உச்சம் உனது மனத்திருப்தி
எனது நிம்மதியின் உச்சம் உனது அருகாமை
எனது பிரார்த்தனைகளின் உச்சம் உனது நல்வாழ்வு
எனது பெருமைகளின் உச்சம் உனது மகளாக பிறப்பெடுத்தது!



Thursday, June 5, 2014

அன்னை!

உருவ வழிபாட்டில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை;
உனதுருவில் இறைவனை காணும்வரை!



Related Posts with Thumbnails